மதுரையில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்தால் இனி கைது மதுரை: தமிழ்நாடு முழுவதும் குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளின் அருகே உள்ள கடைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்களிடம் இருந்து புகார் கிடைத்து உள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமையில் காவல் துறையினர் இணைந்து மதுரை மாவட்டம் முழுவதும் 19 குழுக்களாக பிரிந்து சென்று பெட்டிக் கடைகள், பலசரக்கு கடைகள், சிறிய உணவகங்கள் என கடந்த 3 நாட்களாக 206 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 16 கடைகளுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்த கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 6.5 கிலோ குட்காவை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
இனி வரும் காலங்களில் குட்கா விற்பனையில் ஈடுபட்டால் கைது செய்யப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குட்கா விற்பனை செய்யப்பட்டதாக இரு முறைக்கு மேல் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 10 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை குழுவினர் நோட்டீஸ் வழங்கி, அனுமதிச் சான்றுகளை ரத்து செய்ததோடு கடைகளில் விற்பனைக்கான தடையையும் விதித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:"தமிழக மக்களுக்கு 365 நாட்களும் காவிரி நீர் கிடைக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை" - அண்ணாமலை!