மதுரை: மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வலையங்குளம், கப்பலூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சோழவந்தான், மேலூர் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இது மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக மதுரையைச் சுற்றி, பல்வேறு பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகை, கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்தைப் பெற்றதாகும். இதன் கூடுதலான மணம், தரம் மற்றும் தன்மை ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய சந்தைப்படுத்துதலுக்கும் வாய்ப்பு உண்டு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ''மதுரை குண்டு மல்லிகை'' என்றே பூக்கள் வியாபாரிகள் பெயர் வைத்து விற்பனை செய்கின்றனர்.
மதுரை மல்லிகை வெளிமாவட்டங்கள் மட்டுமன்றி, பிற மாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மலர் வணிக வளாகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 5 டன் மல்லிகைப் பூக்கள் மதுரை மலர்ச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சராசரியாகப் பத்திலிருந்து பதினைந்து டன்கள் மதுரை குண்டு மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.