ஆடி வெள்ளியை முன்னிட்டு அதிகரிக்கும் மதுரை மல்லிகைப்பூ விலை மதுரை: மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, நெடுங்குளம், காரியாபட்டி, மேலூர், கொட்டாம்பட்டி, சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் விளையும் பூக்கள் மதுரை மலர் வணிக வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் பூக்கள் இங்கே கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக மதுரையைச் சுற்றி, பல்வேறு பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகை, கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்தைப் பெற்றதாகும்.
இதன் கூடுதலான மணம், தரம் மற்றும் தன்மை ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய சந்தைப்படுத்துதலுக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக மதுரை மல்லிகை அதிகளவில் இங்கு அதிக அளவில் விற்பனையாகிறது. நாளொன்றுக்குச் சராசரியாக 50 டன் பூக்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் மதுரை மல்லிகையின் தனிப்பட்ட மகத்துவம் காரணமாக வெளி மாநிலங்களுக்கு மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சராசரியாகப் பத்திலிருந்து பதினைந்து டன்கள் மதுரைக் குண்டு மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முகூர்த்த நாட்களில் மட்டுமன்றி, கோயில் திருவிழாக்கள், பண்டிகைகளின் போது மதுரை மல்லிகை விலை அதிகரித்துக் காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழர்கள் கொண்டாடும் முக்கிய மாதங்களுள் ஆடி மாதத்திற்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு.
இந்த மாதத்தில் வருகின்ற ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த அடிப்படையில் ஆடி மாதம் தொடங்கி நாளை முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மதுரை மல்லிகை கிலோ ரூபாய் 600க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மலர் வணிக வளாகத்தில் இன்று விற்பனையாகும் பிற பூக்களின் விலை நிலவரம் பின்வருமாறு, பிச்சி ரூபாய் 500, முல்லை ரூபாய் 400, சம்பங்கி ரூபாய் 200, அரளி ரூபாய் 200, செவ்வந்தி ரூபாய் 250, பட்டன்ரோஸ் ரூபாய் 150 என விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், "சுபமுகூர்த்த நாட்களில் மதுரை மல்லிகையின் விலை சற்று கூடுதலாக இருக்கும். தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ளதால், இனி வரும் நாட்களில் மதுரை மல்லிகைப்பூ மட்டுமன்றி பிற பூக்களின் விலையும் அதிகரித்தே காணப்படும். நாள்தோறும் வரும் மல்லிகைப்பூ வரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை" என்றுக் கூறினார்.
இதையும் படிங்க:விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி! விவசாயத்தில் புதிய அத்தியாயம் துவக்கம்!