ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மோர் பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி அருகே உள்ள மீனவ கிராமம் நம்புதாளை. இப்பகுதியைச் சேர்ந்த கார்மேகம், ராமநாதன், காசிநாதன், காசிலிங்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவர், வங்கதேசத்தைச் சேர்ந்த பெயர் தெரியாத மூன்று மீனவர்கள் என எட்டு பேர் ஒப்பந்த அடிப்படையில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்களாக ஓமன் நாட்டிற்குச் சென்றனர்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஒருவாரம் கழித்து கரை திரும்புவதுதான் வழக்கம். கடந்த செப்.16ஆம் தேதி ஓமன் நாட்டு மஜ்ஜிதா தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், ஒருவாரம் கடந்தும் கரை திரும்பவில்லை. பின்னர் விசாரணை மேற்கொண்டபோது, செப்டம்பர் 28ஆம் தேதியன்று ஓமன் நாட்டு கடற்கரையில் ஹிக்கா என்ற புயல் தாக்கியது தெரியவந்தது.