சிவகங்கை:திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில், மத்திய தொல்லியல் துறையின் சார்பாக கடந்த 2014ஆம் ஆண்டு அகழாய்வு பணி தொடங்கியது. இதன் கண்காணிப்பு அலுவலராக அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றினார். இவரது தலைமையில் கடந்த 2014 - 2015, 2015 - 2016ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகள் நடைபெற்றன.
இந்த ஆய்வின்போது தமிழர்களின் பழமையை பறைசாற்றும் பல்வேறு ஆய்வு முடிவுகள் வெளிக் கொணரப்பட்டன. இதன் 2ஆம் கட்ட ஆய்வில்தான், தமிழர்களின் பண்டைய நகர நாகரீகத்தைப் பறைசாற்றும் மிகப்பெரும் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது.
அதுவரை தமிழ்நாட்டில் நகர நாகரிகம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை என்ற கருத்தாக்கம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 3ஆம் கட்ட அகழாய்வுக்கு முன்பாக அமர்நாத் ராமகிருஷ்ணா அஸ்ஸாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு 4ஆம் கட்டத்தில் இருந்து தமிழ்நாடு தொல்லியல் துறை, கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள தலைமையகத்தில் இந்திய தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் வித்யாவதியிடம் அமர்நாத் ராமகிருஷ்ணா இன்று (ஜன.30) கீழடியின் முதல் 2 கட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற முதல் 2 கட்ட அகழாய்வின் அறிக்கையை, கண்காணிப்பு தொல்லியல் அலுவலர் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையிடம் சமர்பித்தார் இந்த அறிக்கையில் வைகை ஆற்றுப் பகுதியில் நடைபெற்ற தொடக்க ஆய்வுகள், வரலாற்றுப் பின்னணி, அகழாய்வின் நோக்கம், அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள், தமிழி எழுத்துக்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் என 11 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை சற்றேறக்குறைய 1,000 பக்கங்களைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:பொது நூலகங்களில் வைஃபை.. மின் நூலக சேவை தொடக்கம்!