தேனிமாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, இன்று (நவ. 5) அதிகாலை 3 மணிக்கு 66 அடி நீர்மட்டத்தை எட்டியது. இதனை அடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், வைகை அணை மதகு பகுதியில் அமைக்கப்பட்ட அபாய சங்கு ஒலிக்கப்பட்டு, வைகை அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை சார்பில் 5 மாவட்ட நிர்வாகத்திற்கும், பல்வேறு துறை அரசு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 662 கன அடி நீர்வரத்து இருப்பதால் வைகை அணை இன்னும் ஓரிரு நாட்களில் முழுக்கொள்ளவை எட்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.