கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த லாலாஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் வன உயிரின சரணாலயத்தை சுற்றி அமைக்கப்பட உள்ள சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் தொடர்பாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இது ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாக்ராக், அசம்பு, மகேந்திரகிரி ஆகிய பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட எஸ்டேட் இருந்து வருகிறது. இங்கு மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் செய்யப்படுகிறது.
மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் பிப்ரவரி 2020ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கன்னியாகுமரி வன பகுதியை சுற்றியுள்ள 0-3 கி.மீ வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதன் மூலம் அப்பகுதிகளில் விவசாயம் செய்ய தடை விதிக்கப்படும். மேலும் இந்த அறிவிப்பினை குறித்து கருத்து கேட்பும் நடைபெற்றது.
ஆனால், அறிவிப்பாணை இந்தி, ஆங்கிலத்தில் இருந்ததால் இதனுடைய பாதிப்பு சரிவர மக்களுக்கு தெரியவில்லை. இந்த அறிவிப்பாணை செப்டம்பர் 2020ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் இதேபோன்ற வழக்கு ஏற்கனவே விசாரணையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மினி கிளினிக் பணியாளர்கள் தனியார் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தால் செல்லாது’