தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மல்லியின் விலை உயர்ந்தாலும் வேதனையில் விவசாயிகள்! - மலர் சந்தை

மதுரை: கடந்த வாரத்தைக் காட்டிலும் மதுரை மல்லிகையின் விலை சற்றே உயர்ந்தாலும், விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

மதுரை மல்லியின் விலை உயர்ந்தாலும் வேதனையில் விவசாயிகள்!
மதுரை மல்லியின் விலை உயர்ந்தாலும் வேதனையில் விவசாயிகள்!

By

Published : May 19, 2021, 6:26 PM IST

உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிகை அதன் தரத்திற்கும் மணத்திற்கும் உலக அளவில் சந்தையைப் பெற்றுத் திகழ்கிறது. இதன்காரணமாக, மதுரை மலர் சந்தையிலிருந்து பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

திருவிழா, முகூர்த்த நாள்களில் மதுரை மல்லிகை விலை கிலோ 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவது உண்டு. தற்போது கரோனா பெருந்தொற்றின் காரணமாக, அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம், மல்லிகை விவசாயிகளையும், வியாபாரிகளையும் பதம் பார்த்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

மதுரை ஒருங்கிணைந்த மலர்ச் சந்தையில் மதுரை மல்லிகையின் இன்றைய விலை நிலவரப்படி கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போதைய விலையேற்றம், மல்லிகை விவசாயிகளுக்கு சற்று திருப்தியளிப்பதாக விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மல்லிகை விவசாயிகளைத் தொடர்பு கோண்டு கேட்டபோது, "ஊரடங்கு காரணமாக மதுரை‌ மலர்ச் சந்தையின் விற்பனை நேரம் காலை 6 மணியிலிருந்து 10 மணி வரை‌ என அரசு நிர்ணயம் செய்துள்ளதால், பொதுமக்களின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

இதனால், பூக்களின் விற்பனையும் சரிந்து விட்டது. மேலும், மல்லிகைச் செடிகளின் பராமரிப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததும் முக்கியக் காரணம். இதனால், மதுரை மலர்ச் சந்தையில் மல்லிகைப்பூவின் வரத்து 1 டன்னுக்கும் கீழாக குறைந்துவிட்டது.

வழக்கமான நாள்களில் 50 டன்னுக்கும் மேலாக மல்லிகைப் பூ வரத்து இருந்த நிலையில், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இனி வரும் வாரங்களிலும் இந்த நிலையே தொடரும்" எனத் தெரிவித்தார்.

மதுரை மலர்ச் சந்தையில் இன்று (மே 19) பட்டன் ரோஸ் 40 ரூபாயாகவும், சம்பங்கி 20 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பிற பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது. அடுத்த சில நாள்களிலும் இந்த விலை நிலவரமே தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details