தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயி முத்துவின் மரண வழக்கு : தமிழ்நாடு அரசு பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு - Farmer Anaikarai Muthu Death case

மதுரை : தென்காசி வனத்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவின் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விவசாயி முத்துவின் மரண வழக்கு : தமிழ்நாடு அரசை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் !
விவசாயி முத்துவின் மரண வழக்கு : தமிழ்நாடு அரசை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் !

By

Published : Aug 27, 2020, 5:28 PM IST

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயி அணைக்கரை முத்து, தனது மலையடிவார தோட்டத்தை வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சிவசைலம் வனத்துறை அலுவலர்கள், தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்தாகக் கூறி, அணைக்கரை முத்துவைச் சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது விவசாயி அணைக்கரை முத்து திடீரென உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது மனைவி பாலம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்,"விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவரை வனத்துறையினர் தாக்கியதன் காரணமாகவே உயிரிழந்தார். ஆகவே கணவரின் உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்யவும், தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறையின் மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று (ஆகஸ்ட் 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், தலைமை வழக்குரைஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. மனுதாரரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹென்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த நிவாரணங்கள் எதும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.

இடைமறித்த அரசுத்தரப்பு, "அரசின் நிவாரணம் வழங்க ஆட்சியர் காசோலையில் கையெழுத்திட்டு தயார் நிலையில் உள்ளது. வாரிசுப் பிரச்னை காரணமாகவே நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என பதிலளித்தார். தொடர்ந்து மனுதாரர் தரப்பில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இது குறித்து தமிழ்நாடு அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details