தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், ஆன்லைனில் ஒளிபரப்பு! - Famous Madurai Meenatchi temple's Meenatchi wedding event takes place today

மதுரை: மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக எளிய முறையில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் இன்று நடைபெறுகிறது. இதனை பக்தர்கள் வீட்டிலிருந்தப்படியே இணையம் வழியாக காண்கின்றனர்.

மீனாட்சி திருக்கல்யாணம்
மீனாட்சி திருக்கல்யாணம்

By

Published : May 4, 2020, 10:06 AM IST

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், சம்பிரதாயத்திற்காகவும் பக்தர்களின் ஆத்ம திருப்திக்காகவும் இன்று மிக எளிய முறையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பின்றி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருக்கல்யாண நடைமுறைகள் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி, காலை 10.15 மணியளவில் நிறைவு பெறும். காலை 8.30 மணியளவில் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 10.15 மணிக்கு பக்தர்களுக்கு ஆசி வழங்குதல் வரை 15 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. திருக்கல்யாணம் காலை 9.05 மணிக்குத் தொடங்கி 9.29 மணிக்கு நிறைவு பெறுகிறது.

மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே அமைந்துள்ள சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் உள்ள உற்சவ மூர்த்திகள் எழுந்தருளும் சேத்தி மண்டபத்தில், நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.

சித்திரைப் பெரும் திருவிழாவை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் கொடியேற்றம், நாள்தோறும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திரு வீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக் விஜயம், திருத்தேரோட்ட நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, திருக்கல்யாண நிகழ்வு மிக எளிய முறையில் நடைபெறுகிறது.

திருக்கல்யாணம் நடைபெறும் குறிப்பிட்ட நேரத்தில் பெண் பக்தர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே புதிய திருமாங்கல்யத்தை அணிந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வுகள் அனைத்தும் மீனாட்சி அம்மன் கோயில் சார்பாகவும், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாகவும் அந்தந்த இணையதளங்களின் வாயிலாக நேரலை செய்யப்படுகிறது.

ஃபேஸ்புக் மற்றும் யூ ட்யூப் தளங்களிலும் காண்பதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து தரிசித்து அருள் பெற்று செல்லக்கூடிய சித்திரைத் திருவிழா, இந்த ஆண்டு களையிழந்தே காணப்படுகிறது. சித்திரைத் திருவிழா வரலாற்றில் இதுபோன்று பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்காமல் திருக்கல்யாண நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன்முறை என வரலாற்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பொருட்களை வழங்கிய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details