மதுரை சோகோ அறக்கட்டளையில், 'பல்வேறு தளங்களில் நடைபெறும் பாலின பாகுபாடு' குறித்த கருத்தரங்கு நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பாலின பாகுபாட்டில் ஊடகமும் சமூகமும் என்ற தலைப்பில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேசினார்.
அவர் பேசுகையில், "பாலின பாகுபாடு என்பது தற்போது இல்லை என்ற பொதுவான ஒரு தோற்றம் இருந்தாலும் ஒவ்வொருவரின் அடிமன கூறுகளில் இன்னும் பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இதில் பெருமளவு ஒவ்வொரு குடும்பமும் பங்களிப்பு செய்கிறது என்பதுதான் உண்மை.
அதேபோன்று தலைமுறை தலைமுறையாக இந்தப் பாகுபாடு ஆண் பெண் இருபாலருக்கும் விதைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே ஆண் சம்பாதிக்க பிறந்தவன், பெண் வீட்டு வேலை செய்ய படைக்கப்பட்டவள் என்பது போன்ற கருத்துரு நமக்குள் விதைக்கப்பட்டுள்ளது. இதனைத் தகர்த்து மிகச்சரியான பாலின புரிதல், பாகுபாடற்ற தன்மை போன்றவற்றை உருவாக்க வேண்டியது அவசியம்.