கரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் முகக் கவசம், கையுறை போன்றவற்றை பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதையடுத்து அவற்றின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சில இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் மதுரை தனக்கங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் உற்பத்தி நிறுவனத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட பயனாளர்கள் நாளொன்றுக்கு 5000க்கும் மேற்பட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட முகக் கவசங்கள் உற்பத்தி செய்கின்றனர். மேலும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தும் ஆடைகளையும் உற்பத்தி செய்துவருகின்றனர்.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவாதவாறு பிரத்தியோக உடையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை முதற்கட்டமாக சீனாவிற்கு முகவர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக இந்த உற்பத்தி நிலையத்தில் தயார் செய்யப்படும் முகக்கவசம் அனைத்தும் முறையாக சுத்திகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.