மதுரை அருகே உள்ள அரசுப்பள்ளியைச் சார்ந்த தலைமையாசிரியர், தனக்கு வேண்டாத ஆசிரியர்கள் குறித்து அப்பள்ளி மாணவிகள் புகார் அளித்ததைப் போன்று சைல்டு லைனுக்கு (Child help line) தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தப் புகாரைப் பதிவு செய்த காவல்துறை, விசாரணை மேற்கொண்டது.
பாதிக்கப்பட்ட அப்பள்ளியைச் சேர்ந்த பெண் ஆசிரியர் தென் மண்டல காவல்துறை தலைவரிடம் சென்று இந்தப் புகார் பொய்யானது என விளக்கம் அளித்த நிலையில், தனிக்குழு அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், தலைமையாசிரியரின் புகார் பொய்யானது என்பதும், ஆசிரியர்களைப் பழி வாங்க மேற்கொண்ட செயல் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் தற்போது போக்சோ சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், போக்சோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டங்கள் சிதைக்கப்படுகிறது:இச்சம்பவம் பள்ளி ஆசிரியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பாக குழந்தைகள், பெண்கள், நீதித்துறை சார்ந்து இயங்கும் வல்லுநர்களிடம் கேட்டபோது, அவர்கள் பல்வேறு கோணங்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
குழந்தைகள் உளவியல் வல்லுநர் முனைவர் ராணி சக்கரவர்த்தி கூறுகையில், “குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிட்டு உருவாக்கப்பட்ட சட்டங்களில் மிக முக்கியமானது போக்சோ (Pocso Act). அச்சட்டம் தற்போது சுயநோக்கத்திற்காக, விருப்பு வெறுப்பின் அடிப்படையில், பழிவாங்கும் எண்ணத்தோடு தவறாகக் கையாளப்படும் சூழல் அதிகரித்து வருகிறது.
மதுரையிலுள்ள பள்ளி தலைமையாசிரியரின் இந்தச் செயல்பாடும்கூட பாலியல் வன்கொடுமையை சேர்ந்ததாகவே நான் கருதுகிறேன். தங்களின் பழி தீர்க்கும் செயலுக்கு குழந்தைகளை பகடைக் காயாகப் பயன்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற செயல்கள் காரணமாக நிஜமாகப் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் நியாயங்களின் உண்மைத்தன்மையும் கேள்விக்குறியாகிவிடும் அபாயம் உள்ளது. அதற்கு இந்த சம்பவம் ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற பயமும் எங்களைப் போன்ற செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளின் முகத்தை காட்டக்கூடாது என்பது மட்டுமன்றி பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டத்தின் நல்ல நோக்கத்தை இவர்கள் சிதைக்கிறார்கள். தற்போதுள்ள ஆய்வின் அடிப்படையில் போக்சோ நிகழ்வுகளில் 20லிருந்து 25 விழுக்காடு சம்பவங்களே வெளியே தெரிகின்றன. அந்த வாய்ப்பையும் இது போன்ற தவறான புகார்கள் கெடுத்துவிடும். இந்த நபர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
இரும்புக்கரம் வேண்டும்: பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்ற நபர்களின் உளவியலைக் கணிக்கும்போது, பாலியல் குறைபாடு, உளவியல் குறை, மன நோய் என அவர்களுக்கான காரணிகளை வகைப்படுத்தலாம். ஆனால், மற்றவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள படித்த நபர்கள் பழிவாங்கும் எண்ணத்தில் இதுபோன்று இயங்குவது மிக மிக ஆபத்தான போக்கு. போக்சோவில் வழங்கப்படும் அதே தண்டனை இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள குழந்தைகள் பிடிவாதப் போக்கு, பழி வாங்கும் எண்ணம் கொண்ட இயல்பினராக உருவாகி வருகின்றனர். இதற்கு பல்வேறு புறக்காரணிகள் மட்டுமன்றி அகக்காரணிகளும் உள்ளன. அவர்களும் மிரட்டுவதற்கு இதுபோன்ற சட்டங்களைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது. இதுபோன்ற நல்ல சட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் நிலை உருவானால், கடைசியாக 'புலி வருது... புலி வருது...' கதையாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.