மதுரை: தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியமாகத் திகழும் ஜல்லிக்கட்டு, சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளியிலேயே நிகழ்ந்ததற்கான தொல்லியல் சின்னங்கள் கிடைத்துள்ளன. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் 'ஏறு தழுவுதல்' என்னும் பெயரில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என கலித்தொகை ஏறு தழுவுதல் குறித்து குறிப்பிட்டுக் கூறுகிறது. 'கொல்ல வரும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனைத் தமிழ் பெண் மறு பிறப்பில் கூட மணக்க விரும்ப மாட்டாள்' என்பது இந்தப் பாடலின் பொருளாகும். அந்த அளவிற்கு ஏறு தழுவுதல் தமிழர்களின் மரபில் ஒன்று கலந்துள்ளது.
இந்த நிலையில், இதனை விலங்கு வதை என்னும் அடிப்படையில், பீட்டா உள்ளிட்ட பல்வேறு விலங்கு நல அமைப்புகள் நீதிமன்றத்தை நாடி தடை பெற்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான தடையை ரத்து செய்யக் கோரி கடந்த 2016 ஆம் அண்டு டிசம்பர் மற்றும் 2017 ஜனவரியில் மிகப் பெரும் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது.
குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை, மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், செல்லூர் ரயில்வே மேம்பாலம் என தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சட்டசபையை அவசர அவசரமாகக் கூட்டி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது.
இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, அன்றைய தினத்தில் இருந்து ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற்று வந்தாலும், தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி, மீண்டும் அதற்கு எதிரான அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
அந்த வழக்கில் பல கட்ட விசாரணைகள் நடைபெற்று, கடந்த மே 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தத்திற்கு அனுமதி அளித்தது. இதனை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாடினர்.
அதேநேரம், இந்தப் போராட்டம் நடைபெற்றபோது அதில் ஈடுபட்டு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்பதுடன், மேலும் பல்வேறு பிரிவுகளில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கிற்காக கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் சற்றேறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீதிமன்றப் படியேறி வருகின்றனர்.
அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், ‘ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு’ என்ற பெயரில் இயங்கி வரும் இவர்கள், இதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் மாநாடு நடத்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.