தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அனுமதியை மீறி மணல் அள்ளக் கூடாது' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டல மாணிக்கம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அனுமதித்ததை விட, மணல் அள்ளக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Mar 4, 2021, 8:08 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மாறந்தையைச் சேர்ந்தவர் சரவணன். இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கமுதி தாலுகா மண்டல மாணிக்கம் பகுதியில் பலர் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள பட்டா நிலங்களில் உபரி மண் உள்ளது.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டட கட்டுமானப் பணிக்கு இங்குள்ள உபரி மணலை அள்ள அரியலூரைச் சேர்ந்தவருக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். ஆனால், அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் மணல் அள்ளி வெளியில் விற்பனை செய்யப்படுகிறது.

கட்டுமானம் நடக்கும் பகுதிக்கும், மணல் அள்ளும் பகுதிக்கும் இடையே 80 கி.மீ. தொலைவு உள்ளது. ஆனால், 8 கி.மீ. தொலைவிற்குள் மணல் விற்கப்படுகிறது. அனுமதியை மீறி விற்பனை நோக்கில் மணல் அள்ளுகின்றனர். எனவே, உபரி மணல் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர், “அனுமதிக்கப்பட்ட படி அரசு கட்டட கட்டுமானப் பணிக்காக மட்டுமே மணல் அள்ள வேண்டும். வேறு எதற்காகவும் மணல் அள்ளக் கூடாது. இந்த மனு குறித்து ராமநாதபுரம் ஆட்சியர், கனிமவளத் துறை உதவி இயக்குநர், கமுதி வட்டாட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: சட்டவிரோதமான குவாரிகள் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details