மதுரை: தோழர் நன்மாறன். இந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே மதுரை மக்களுக்கு பெருமிதமும் உற்சாகமும் இயல்பாகவே பிறக்கும். காரணம், மக்கள் போராளி. குழந்தைக் காதலர். இளைஞர்களின் உற்சாகம். தோள்பையுடன், அவரது அரதப்பழசான டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தில் வெள்ளை வேட்டி சட்டையோடு மதுரையின் எந்தத் தெருக்களிலும் பார்க்கலாம். 'தோழர் வாங்க டீ சாப்பிடலாம்' என்று உரிமையோடு அழைக்கின்ற எவரையும் தோழமை உணர்வோடு மதிக்கின்ற பாங்குதான் நன்மாறனின் வெற்றிக்கு மகத்தான காரணம்.
ராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தோழர் நன்மாறன் 1947ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி மதுரையில் வே.நடராஜன் - குஞ்சரத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மதுரை அழகரடியில் உள்ள ஆறுமுகம் பிள்ளை பள்ளியில் பள்ளிப் படிப்பையும், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.
கம்யூனிஸ்டின் காதலர்
பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ., (தமிழ்) பட்டமும் பெற்றார். நன்மாறனின் தந்தை பஞ்சாலை தொழிலாளி. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சியின் மீதான அடக்குமுறைக் காலத்தில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தவர். சோவியத் நாடு, தாமரை இதழ்களை வாசித்தவர். அதனால் இயல்பாகவே நன்மாறன் கம்யூனிஸ்ட்டுகள் மீது அளவு கடந்த அபிமானத்தைக் கொண்டிருந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்தார். நூலகம் சென்று படிக்கும் பழக்கம் சிறுவயதிலேயே இருந்ததால் எழுத்தாளர்கள் மு.வரதராசன், அகிலன், கல்கி, பி.எஸ்.ராமையா, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன் போன்றவர்களின் படைப்புகளை தொடர்ந்து வாசித்தார். அத்துடன் பள்ளியில் படிக்கும் போதே தமிழ் செய்யுள்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறனுடன் விளங்கினார். அது அவரது பேச்சுத் திறமைக்கு ஆதாரமாய் அமைந்தது.
பள்ளியில் மாணவர் மன்றச் செயலாளராகவும், மதுரை நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராகவும் செயல்பட்டார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், மாபொ.சிவஞானம், என்.சங்கரய்யா, ஆர்.உமாநாத் ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். எளிமையாகவும், நகைச்சுவையாகவும் பேசும் திறனை பெற்றதால் மேடைக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டார்.
சட்டப்பேரவையில் இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்
கடந்த 1974ஆம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட போது,அதன் மாநிலச் செயலாளராக பணியாற்றினார். இளைஞர்களுக்கு வேலை கேட்டும், வேலையில்லாக் கால நிவாரணம் கேட்டும் மதுரையில் நன்மாறன் தலைமையில் 250 இளைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டு 18 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பிறகு முழு நேர ஊழியராக செயல்பட்டார்.