இந்த வழக்கில் அவர் பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், "2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிணை வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பிணை கோரி மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (அக். 28) நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் நாஞ்சில் முருகேசனுக்கு பிணை கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை. பிணை வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது, எனவே பிணை வழங்கக்கூடாது என்றார்.
மனுதாரர் தரப்பில், "வழக்குப் பதிந்து கைதுசெய்யப்பட்டு 90 நாள்களைக் கடந்தும் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யவில்லை, எனவே பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என வாதிட்டனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, நாஞ்சில் முருகேசனின் பிணை மனுவை மூன்றாவது முறையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.