மதுரை: கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக முதலமைச்சரையும், தமிழக அரசையும் அவதூறாகப் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அவதூறு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி என்பவர்ம் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நேற்று(ஜன.11) ஆஜராக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு அவர் ஆஜரானார். அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “நான் ஆர்ப்பாட்டத்தில் உண்மையைத் தான் கூறினேன். ஆனால் என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். நான் பொதுவாழ்வுக்கு வரும் போது, திமுக தொடர்ந்த கொலை வழக்கிலேயே முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, அந்த வழக்கில் குற்றமற்றவன் என நிரூபித்து விடுதலையானவன்.