தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணமானது ஒரு ஏற்றமிகுத் திட்டம். லண்டன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் தொழிலதிபர்களாக இருக்கக்கூடிய தமிழர்கள் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டை பெற்றுத் தருவதற்காக சென்றுள்ளார்.
இந்தச் சுற்றுப் பயணத்தில் பல்வேறு துறைகளுக்கான வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. பால் வளத் துறையை பொறுத்தமட்டில் ஒரு புதிய உத்தியை கையாண்டு நவீனமான உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வண்ணம் திட்டங்களோடும், பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான நிலைப்பாட்டுடனும் முதலமைச்சர் வந்துள்ளார்.
முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து பெரும்பாலான சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட அனைவரும் பாராட்டி வரவேற்றுவருகின்றனர். ஆனால் ஸ்டாலின் வயிற்றெரிச்சல், பொறாமை காரணமாக முதலமைச்சரின் பயணத்தை விமர்சித்துவருகிறார்.