மதுரை: வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் வலையர் வாழ்வுரிமை மாநாடு மதுரை ஒத்தக்கடை திடலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, " வலையர்களின் முன்னேற்றத்திற்காக வலையர் நல வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். வேளாண்மை செழிக்க தேவையான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்திவருகிறது. குடிமராமத்து பணியால் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்காமல் தடுத்துள்ளோம், காவிரி டெல்டாவை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளோம். கல்லணைக் கால்வாயை மேம்படுத்த உள்ளோம். அரசின் சிறிய முயற்சியால் 7 முறை உணவு தானிய உற்பத்தி 100 மெட்ரிக் டன்னை தாண்டியுள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு விருது வாங்கியுள்ளது.
'கருவிலுள்ள குழந்தைக்கு கூட இரட்டை இலையைப் பிடிக்கும்'- முதலமைச்சர் குடும்ப அட்டைதாரருக்கு தலா 2,500 ரூபாயை வழங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் அதிக அளவிற்கு கால்நடை மருத்துவமனையை தொடங்கியது அதிமுக அரசுதான். சேலத்தில் ஆசியாவிலயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை உருவாக்கியுள்ளோம். உடுமலைப் பேட்டையில் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கியுள்ளோம். மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு அதிமுக அரசு அடித்தளமாக இருந்துள்ளது.
கருவில் வளரும் குழந்தைக்கு கூட இரட்டை இலையைப் பிடிக்கும். கருவில் உள்ள குழந்தையின் நன்மைக்காக 18 ஆயிரம் உதவித்தொகையை வழங்கியுள்ளோம். கடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 6 மாணவர்களுக்குத்தான் இடம் கிடைத்தது. இந்தாண்டு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை வழங்கியதால் 435 பேர் மருத்துவ மாணவர்களாக உருவாகியுள்ளனர். ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறியுள்ளது. ஏழை மக்கள் வாழும் பகுதியை தேர்வுசெய்து அந்தப் பகுதிகளில் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க:'பாஜகவைத் தவிர வேறு எந்தக்கட்சியாலும் கட்சத்தீவை மீட்கமுடியாது'- பாஜக வழக்கறிஞர் மவுரியா