மதுரை:இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மலைகள், குன்றுகள் ஆகியவை வணிக நோக்கங்களுக்காகவும், மக்களின் தேவைகளுக்காகவும் கிரானைட் கற்களாகவும், எம் சாண்ட் மணலாகவும் உடைக்கப்படும் அபாயம் குறித்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வரும் பல்வேறு நபர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 1996-97 முதல் 2012-13ஆம் ஆண்டுவரை 17 ஆண்டுகளில் கிரானைட் ஏற்றுமதி மூலம் இந்தியா ரூ.52,374 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இந்திய அளவில் கிரானைட் ஏற்றுமதியில் ஆந்திரா 52 விழுக்காடு, ராஜஸ்தான் 16 விழுக்காடு, கர்நாடகா 15 விழுக்காடு, தமிழ்நாடு 13 விழுக்காடு என முன்னணியில் இருந்து வருகின்றன. ஒருபுறம் அரசு இதனை வணிகமாகப் பார்த்தாலும், மலை சூறையாடப்படுகின்ற காரணத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வல்லுநர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் கருங்காலக்குடியைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் பக்ருதீன் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், 'மணல், கற்களின் தேவை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே செல்கிறது. அதே நேரம் வளச்சுரண்டல் நடைபெறாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மக்கள் தங்களது கட்டுமானத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். கருங்காலக்குடியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலிருந்து வெட்டப்படும் கற்கள் தென் மாவட்டங்கள் முழுவதும் செல்கின்றன. இதனைத் தடுத்து, பண்டைய கால மக்களின் வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ வேண்டும்' என்றார்.
மத்திய அரசு வழங்கியுள்ள புள்ளி விவரத்தின்படி, இந்தியாவின் மொத்த கிரானைட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.6,808 கோடி. தமிழ்நாட்டில் மட்டும் 19 மாவட்டங்களில் கிரானைட் உற்பத்தி நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக மதுரையின் பங்கு மட்டும் 41.10 விழுக்காடாகும். கடந்த 1996-97 முதல் 2012-13ஆம் ஆண்டுவரை 17 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.2,798 கோடிக்கு கிரானைட் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட 17 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கிரானைட் ஏற்றுமதி 1,51,59,045 கனமீட்டர். இதில், தமிழ்நாட்டின் பங்கு 19,70, 675 கனமீட்டராகும். அதில், மதுரை மாவட்டத்தின் பங்கு 8,09, 947 கனமீட்டர்.
அரசால் அனுமதிக்கப்பட்ட அளவு மற்றும் இடங்களை மீறி ஆழமாகவும், அகலமாகவும் கிரானைட் கற்கள் வெட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் கற்கள் வெட்டியெடுப்பதற்கான உரிமத்தை அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக இங்கு கிரானைட் தொழில் முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 175 நிறுவனங்களுக்கு தற்போது மதுரை மாவட்டத்தில் இயங்க அனுமதியில்லை.