மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்த நிலையில், வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த மர்ம பெண் ஒருவர் தான் ஒரு அரசு அலுவலர் எனக் கூறிக்கொண்டு, வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்குச் சென்று, அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச்சென்று அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் நகல் எடுத்துள்ளார்.
இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவர அந்தப் பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கவே அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மதுரையில் வேட்பாளர்கள் தொடர் தர்ணா இந்நிலையில், மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த அந்த பகுதியில், அதிகாரிகள் அனுமதியின்றி ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரி, அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குப்பதிவு பாதுகாப்பு மையத்தின் முன்பாக நேற்று இரவு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் பேசுகையில், " வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டிராங் ரூம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், ஸ்டோரேஜ் அறைகளில் சீல் வைக்கப்படவில்லை. ஆவணங்களை எடுத்துச் சென்ற நபர் அரசு அலுவலர் என்று தெரிகிறது. ஆனால், இதுபோன்று முறையான அனுமதியின்றி அரசு அலுவலர்கள் உள்ளே வந்துசெல்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.