தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக திகழ்வது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், உறவினர் இல்லாத காரணத்தினாலும் உறவினர்கள் விட்டுச் செல்வதாலும் சிகிச்சை முடிந்தப் பிறகும் மருத்துவமனையை சுற்றியே தங்கியிருப்பது வழக்கம்.
கேட்பாரற்று கிடந்த சடலம்
இதற்கிடையில், கடும் குளிர் காரணமாக மருத்துவமனை வாசலில் தங்கியிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் மருத்துவமனை வாசலிலேயே சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக கேட்பாரற்று கிடந்தது. காவல்துறைக்கு முறையாக தகவல் கொடுக்காத காரணத்தால் உடலை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இறந்தவர் யார் என்பது குறித்தும் சிகிச்சைக்காக வந்தவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையைச் சுற்றியுள்ள சாலை ஓரங்கள், குப்பைத் தொட்டிகள், சாக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தன்னார்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கூலி தொழிலாளி உயிரிழப்பில் மர்மம் : போலீசார் விசாரணை