தற்போது ஈசல் சீசன் என்பதால் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் பறந்து திரியும் ஈசலைப் பிடிப்பதிலும், பிடித்து உண்பதிலும் போட்டி போடுகின்றனர் மக்கள். மழைக்காலம் என்பதால் பகலில் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் ஈசல் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. புரதமும், கொழுப்புச் சத்தும் நிறைந்த இவ்வகை ஈசலை சிலப் பகுதி மக்கள் அப்படியே பிடித்துத் தின்பதும் வழக்கமாகும்.
முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி கூறுகையில், 'ஐந்து வகையான ஈசல்கள் உண்பதற்கு ஏற்றவை. தற்போது நாங்கள் பிடித்துக் கொண்டிருப்பது திரள் ஈசலாகும். கருமுத்து ஈசல், குமுட்டாமுத்து ஈசல், சிறுபுத்து ஈசல், கவரபுத்து ஈசல் போன்ற ஈசல்களும் சாப்பிடக்கூடியவையாகும். ஊளக்கரையான் ஈசலை சாப்பிடக்கூடாது. இதற்கான சீசன் என்பது ஆடியிலிருந்து தொடங்கி புரட்டாசி வரை நீடிக்கும். பிற மாதங்களில் ஈசல் பிடிப்பதில்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற குறைபாடுகளுக்கு ஈசல் ஏற்றதாகும். குடலைச் சுத்தப்படுத்தி நோயின்றிக் காக்கும் அருமருந்தாகும்' என்று அவர் கூறினார்.