மதுரை: இருதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்ற காரணத்தால் மாரடைப்பு, இருதய செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவ்வாறு ஒருவருக்கு ஏற்படும்போது மருத்துவர்கள் இருதய பாதிப்புக்கு ஏற்றவாறு மருந்து, மாத்திரைகள், ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டண்ட், பைபாஸ் சர்ஜரி செய்து நம்மைக் காப்பாற்றுகின்றனர்.
அதேசமயம் இருதயம் மிகவும் பலவீனமானவர்கள், இதயத்தசை செயலிழப்பு அதிகம் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்கள் ஆகியோருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல், ரத்த இழப்பில்லாமல் செய்யக்கூடிய மூன்றாவது சிகிச்சை முறைதான் இஇசிபி (EECP - Enhanced External Counter Pulsation).
அங்கீகாரம் பெற்ற சிகிச்சை
இச்சிகிச்சை முறை முதன்முதலில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் பெற்றது. தற்போது ஜப்பான், சீனா, கொரியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்தியாவிலும் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை முறை 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இஇசிபி சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் வழங்கப்படும் இந்தச் சிகிச்சை, ஏழை நோயாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படுவதால் மிகப் பயனுள்ள ஒன்றாகும். இச்சிகிச்சையின் மூலம் இதுவரை 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.