மதுரை:2022ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில், பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. எனவே இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி - ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மீண்டும் போர் உருவானது. பின்னர் இதுதொடர்பாக ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணையில், ஈபிஎஸ் தரப்புக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று (பிப்.23) அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ஜூலை 11, 2022 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து இயங்குவார் எனவும், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் எனவும் தீர்ப்பளித்தது. இவ்வாறு ஈபிஎஸ்சுக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.