தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நியோ மேக்ஸ் மோசடி: தலைமை இயக்குநர் உட்பட மூன்று பேர் கைது! - தலைமை இயக்குனர் கைது

NEO MAX financial institution scam: நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் தலைமை இயக்குனர் உட்பட மூன்று பேர் கைது
மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் தலைமை இயக்குனர் உட்பட மூன்று பேர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 5:02 PM IST

மதுரை:மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவந்தது நியோமேக்ஸ் நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும், மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு கணக்கான நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.

ஆனால், முறையாக பணத்தை திரும்பி வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் நிறுவனம் குறித்தும் அதன் நிர்வாகிகள் மீதும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, மேலும் பலருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், அவரது சகோதரரும் நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களில் ஒருவருமான சிங்காரவேலன், மைக்கேல் செல்வி, நடேஷ்பாபு உள்ளிட்ட சிலர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில் நிறுவனர்களான வீரசக்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இவர்களது ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நியோ மேக்ஸ் தலைமை இயக்குநர்களில் ஒருவரான திருச்சியை சேர்ந்த வீரசக்தி (45) மற்றும் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களின் ஒருவரான பாலசுப்ரமணியன் மற்றும் பாலசுப்பிரமணியத்தின் மகள் லாவண்யா ஆகிய மூவரை பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் மணீஷா தலைமையிலான காவல்துறையினர் மதுரையில் வைத்து கைது செய்தனர். அவர்கள் மூவருக்கும் மருத்துவ சோதனை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வீரசக்தி மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளராக திருச்சியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கம்பத்தில் காந்தி சிலையின் கையை உடைத்த மர்ம நபர்கள்.. சிலையின் முன் குவிந்து வரும் கட்சியினர்!

ABOUT THE AUTHOR

...view details