மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கு பொருளாதாரத் துறை சார்பாக நடைபெற்றது. இதில் பொருளாதார ஆலோசகரும், வல்லுநருமான ஜெயரஞ்சன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை குறித்துப் பல்வேறு வகையிலான விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. தேவை மற்றும் வழங்கலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இன்றைய பொருளாதார சூழலுக்குக் காரணம். ஆனால், இதுபோன்ற நிலை நமது இந்திய வேளாண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பே நேர்ந்து இன்று வரை தொடர்கிறது.
விவசாயத்திற்கான மூலப்பொருள் விலை உயர்வு தொடர்ந்து நிகழ்கிறது. ஆனால், அவர்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை சரிந்து வருகிறது. கிராமப்புறங்களில் மிக சாதாரணமாக விற்பனையாகக்கூடிய பேஸ்ட், பிரஷ் போன்ற பொருட்கள்கூட இன்று விற்பனை ஆவதில்லை என அதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எங்களது அஞ்சு ரூபா பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை என்று பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் கூறுவதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.