மதுரை :திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அங்கிட் திவாரி பணியில் சேர்ந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 2023ஆம் ஆண்டு மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறியதுடன் இதிலிருந்து அவரை காப்பாற்றுவதாகக் கூறி அங்கிட் திவாரி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர் சுரேஷ் ஒப்புக்கொள்ளாததால் கடைசியில் ரூ.51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டதாகவும் அதில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து டாக்டர் சுரேஷ் பாபு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது
மீதித் தொகையை நேற்று (நவ.30) அங்கிட் திவாரி மருத்துவரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டுள்ளார். இது குறித்து நேற்று (நவ. 30) திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சுரேஷ் பாபு புகார் செய்தார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி இன்று (டிச. 1) திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில் அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை வைத்தனர்.
அந்த காரை எடுத்து அவர் செல்ல முயன்றபோது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து, அவரை திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 20 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக வருகை தந்தனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.