மதுரை: வட கிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், ஏரிகள் நிரம்பியதை அடுத்து, அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. அந்த வகையில், வைகை அணையிலும் நீர் திறந்துவிடப்பட்டு, வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சித்தாதிபுரம் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
மதுரையின் சுற்றுவட்டாரத்தில் இந்த அணை அமைந்திருப்பதால், பலரும் இந்த அணையை அறிய வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருவித்துறை கிராமத்திற்கு உட்பட்ட சித்தாதிபுரம் என்ற ஊரில், இந்த சித்தாதிபுரம் தடுப்பணை அமைந்துள்ளது. நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு பாண்டியர்கள் உருவாக்கியது தான் இந்த தடுப்பணை. வடக்கு தெற்காக ஓடி வரும் வைகை, இந்த இடத்தில் திடுமென கிழக்கு மேற்காகத் திரும்புகிறது.