மீன்வள பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.ஜெயஷகிலா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசின் அனுமதி பெறாமல் 9 சுயநிதி கல்லூரிகளில் 10 படிப்புகள் தொடங்க அனுமதி கொடுத்துள்ளனர். இந்த பாடங்களை தொடங்க, மீன்வள பல்கலைக்கழக விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமான இளநிலை மீன்வளப பாடப்பிரிவுக்காக கொடுக்கப்பட்ட நிதிகளை அரசின் அனுமதி பெறாமல் சுயநிதி கல்லூரிகளுக்கு துணைவேந்தர் ஒதுக்கியுள்ளார். இதனால், அரசால் உருவாக்கப்பட்ட வழக்கமான பாடப்பிரிவுகளுக்கு போதிய நிதி உதவி இல்லாமல், பல்வேறு சிரமங்களை சந்தித்துவருகிறது. இதேபோல் நிர்வாகம், மாணவர்கள் சேர்க்கை, ஊழியர்கள் நியமனத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுவருகின்றன.
ஆகவே துணைவேந்தர் பணி நியமனம், ஆசிரியர்கள் அல்லாத பணி நியமனங்கள் தொடர்பான முடிவுகள் ஆகியவற்றை எடுக்க தடை விதிக்க வேண்டும். டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் மீதான புகார் தொடர்பாக விசாரித்து பல்கலைக்கழக வேந்தரான, ஆளுநரிடம் அறிக்கை அளிக்கவும், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.