மதுரையை சென்னையாக மாற்றி விடாதீர் - வெங்கடேசன் எம்.பி.
மதுரை: கரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவும் சென்னை மாநகரைப் போன்று மதுரையும் மாற்றி விடாதீர்கள் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்தக்கோரி எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று( ஜூன் 15) நடத்தினர்.
இதில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தி.மு.க., சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.மூர்த்தி, டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கரோனா நோயாளி போல ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், ''சென்னையை நியூசிலாந்தைப் போல மாற்றுவோம் என பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் எங்களது வேண்டுகோள் மதுரையை சென்னையாக மாற்றி விடாதீர்கள் என்பதுதான்.
கரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து மதுரைக்குள் வந்துள்ள 25 ஆயிரம் பேரை வீட்டிலேயே தனிமைப்படுத்துங்கள்'' என்றார்.