மதுரை மாடக்குளம் கண்மாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் உள்ள 5ஆயிரம் ஏரிகள், குளங்கள் முதலமைச்சர் நிதியில் தூர் வாரப்பட்டு மழைநீர் சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமிக்கப்பட்டு வருகிறது.
மாடக்குளம் கண்மாயை சீரமைப்பதன் மூலம் திருப்பரங்குன்றம், மதுரை உட்பட பல பகுதிகள் பயன்பெறும் என தெரிவித்தார். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததால் தான் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன.
எனவே நீர்நிலைகளை ஆக்கிரமித்தது யாராக இருந்தாலும், அரசியல் குறுக்கீடுகள் இருந்தாலும் எவ்வித தயவு தாட்சண்யமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரித்தார். மேலும் வைகை அணையை தூர்வாருவதற்கான நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து பேசிய அமைச்சர், வேலூர் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது மகனும் மட்டுமே பரப்புரை செய்தனர். வேறு பெரிய தலைவர்கள் யாரும் பரப்புரை செய்யவில்லை. இதுவே அது குடும்ப கட்சி என்பதை தெளிவுபடுத்துகிறது. அதிமுக தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றியதால் தான் வேலூர் தொகுதியில் கடந்த தேர்தலை விட இம்முறை அதிக வாக்குகள் பெற்றோம்.
திமுக, பாஜகவுடன் சேர துடிக்கிறது என குற்றம்சாட்டிய அவர் வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றி உண்மையான வெற்றி இல்லை. சிறுபான்மையினரை திசை திருப்பி குறுக்கு வழியில் பெற்ற வெற்றி ஆகும் என்றார்.