மதுரை மத்தியத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சியில் விதிகளைப் பின்பற்றாது அதிமுகவினருக்கு ஆதரவாக வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளது என்றும்; இதனை திரும்பப் பெறவும், முறையாக வரையறை செய்தபின் தேர்தலை நடத்திட வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதனிடையே மதுரை மாநகராட்சி வார்டு மறுவரையறையில் உள்ள குளறுபடிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மக்கள் தொகைக்கும் வாக்காளர் எண்ணிக்கைக்கும் முரண்பாடு உள்ளது. எந்த ஒரு தொகுதியிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மக்கள் தொகை எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்க முடியாது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் 24 வார்டுகள் மக்கள் தொகையைவிட அதிகமான வாக்காளர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இதில் மத்திய தொகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட 16 வார்டுகளில் ஒன்பதில் மக்கள் தொகையைவிட வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மத்திய அரசின் மறுவரையறை சட்டம் 2003 மற்றும் மக்கள் பிரதி நிதித்துவச் சட்டங்களின்படி சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள் மாற்றப்படக் கூடாது. அதாவது 2016ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வாக்களித்த வாக்காளர் வேறொரு தொகுதிக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை மாற்றப்படக் கூடாது.
ஆனால், மதுரை கிழக்கில் வாக்காளர்களாக இருந்த 38ஆவது வார்டு மக்கள் சிலர் தற்போது மதுரை வடக்கின் வாக்காளர்களாக மாற்றப்படுகிறார்கள். நகராட்சி அமைப்புகளில் விதிகள் மீறப்பட்டுள்ளன. எந்த ஒரு வார்டும் சட்டமன்றத் தொகுதி எல்லைகள் மற்றும் இயற்கையான எல்லைகளைக் கடந்து அமைந்து இருக்கக்கூடாது எனத் தமிழ்நாடு நகராட்சி அமைப்புகள் விதிகள் எண் 7 தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் தற்போது நடைபெற்றுள்ள வார்டு மறுவரையறையில் குறிப்பாகப் பல புதிய வார்டுகள் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கிடையே பரவி அமைந்திருப்பது மேற்கூறப்பட்டுள்ள சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும். மறுவரையறை விதிகள் மீறப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மறுவரையறை வாரியச் சட்டம் - 'வார்டுகளின் மக்கள் தொகை கூடுமான வரை சமமாக இருக்க வேண்டும்'; தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மறுவரையறை விதிகள் - ' வார்டுகளில் மக்கள் தொகைக்கு இடையேயான வேறுபாடு +/-10 விழுக்காடு வரை மட்டுமே அனுமதிக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 61% வார்டுகள் அனுமதிக்கப்பட்ட வேறுபாட்டை மீறுவதாக உள்ளது.