திமுகவிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தி.மு.க.,வின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரிக்கும், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே அரசியல் பனிப்போர் மூண்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதில் தனது பங்களிப்பு இருக்கும் எனத் தெரிவித்த மு.க.அழகிரி கடந்த 3ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட அந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிகக் கடுமையாக மு.க.அழகிரி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று (ஜன.5) அளித்திருந்த பேட்டியில், “ எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான் தான். எத்தனையோ பேரை அமைச்சர்கள் ஆக்கினேன். அவர்களில் பலர் நன்றியில்லாமல் போய்விட்டனர்.
பாதிக்கப்பட்ட திமுக தொண்டனுக்காக நான் நீதி கேட்டேன். அதற்காக திட்டமிட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நான் நீக்கப்பட்டு ஏழாண்டுகள் ஆகிவிட்டன. கலைஞருக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமலயே என்னை திமுகவில் இருந்து சில துரோக சக்திகள் நீக்கினர்.
இன்றும் என் வார்த்தைக்காக திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் காத்திருக்கின்றனர்.