மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மதுரையிலிருந்து பரமக்குடி சென்றபோது பல்வேறு இடங்களில் காவல் துறை தடுத்து நிறுத்தியது. இதனால் பல மணி நேரத்திற்கும் மேலாகப் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது.
பரமக்குடிக்கு செல்லவிடாமல் காவல் துறை வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டு, எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் வேறு அமைப்புக்கு அஞ்சலி செலுத்த காவல் துறை அனுமதி வழங்கி ஒரே சமூகத்திற்கு உள்ளாகவே மோதலை உருவாக்க காவல் துறை நினைக்கிறது.
இமானுவேல் சேகரன் நினைவிடப்பொறுப்பை மாற்ற வேண்டும். புதிய தமிழகம் கட்சியிடம் நினைவிடப் பொறுப்பை வழங்க வேண்டும். இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்தக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.
திமுக தேர்தல் நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தது. ஒரு வாக்குறுதியையும் திமுக செயல்படுத்தவில்லை. அனைத்து தேர்தல் வாக்குறுதிக்கும் நேர்மாறாக திமுகவின் நடவடிக்கைகள் உள்ளன. மின் கட்டண உயர்வால் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.