மதுரை:விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று (பிப்.8) மதுரையில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். இதனிடையே மதுரை அழகர்கோயில் சாலையில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அதிமுகவின் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். இதை இன்று மதுரையில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேசியபோது உணரமுடிந்தது என்றார்.
கடந்த பத்தாண்டுகளாக எவ்வித நல்லதிட்டங்களையும் அதிமுக அரசு கொண்டுவரவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், விவசாயக் கடன்களை திமுக ஆட்சி அமைந்தவுடன் தள்ளுபடி செய்வோம் என ஜனவரி முதலே ஸ்டாலின் பேசிவருவதாகவும், சசிகலாவை அதிமுகவினர் சின்னம்மா என பாராட்டிய நிலையில், தற்போது அவரை திமுகவின் பி டீம் என கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையும், ஸ்டாலினும் தேர்தல் கதாநாயகர்கள்- கனிமொழி எம்பி மு.க. அழகிரி தொடர்பான கேள்விக்கு, மு.க. அழகிரியை கட்சியில் மீண்டும் இணைப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் முடிவெடுப்பார், இதுகுறித்த கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகளில் திமுக தற்போது வரை உறுதியாகவுள்ளது எனப் பதிலளித்த அவர், திமுக ஆட்சியமைந்தவுடன் தென்மாவட்ட வளர்ச்சிக்கு உரிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், வருகின்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையும், திமுக தலைவர் ஸ்டாலினும்தான் கதாநாயகர்களாக இருப்பார்கள் என்றார். தொடர்ந்து, பொள்ளாச்சி சம்பவத்தில் இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை, அதிமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டையும் கனிமொழி செய்தியாளர் சந்திப்பின்போது பதிவுச்செய்தார்.
இதையும் படிங்க: வெற்று விளம்பர ஆட்சி நடத்தும் அதிமுக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு