மேலவளவு படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் 13 பேர் தமிழ்நாடு அரசால் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, 'மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மேலவளவில் கடந்த 1997ஆம் ஆண்டு வரை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தான் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வந்தார்கள். திமுகவிலிருந்த முருகேசன் என்பவர், அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நின்றார்.
இரண்டு மனநிலையிலிருந்த முருகேசன் அப்போது ஆட்சியிலிருந்த முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த பிறகு, அவரது வலியுறுத்தலின் பேரில் அத்தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். அவரது வெற்றிக்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை அவ்வூரிலிருந்த ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட நபரின் தலைமையின் கீழ், இந்தக் கிராமம் இயங்க வேண்டுமா என பெரும் வன்மத்தில் இருந்தனர்.
பிறகு சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியினர், 1997ஆம் ஆண்டு பேருந்தில் பயணித்த முருகேசன் உள்ளிட்ட ஐந்து பேரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 41 பேருக்கு மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நடைபெறும்போதே ஒருவர் இறந்துவிட்டார்.
அதற்குப் பிறகு அதிமுக, திமுக என தமிழ்நாட்டில் ஆட்சி பீடங்கள் மாறினாலும், வழக்கை நாங்கள் தொடர்ந்து நடத்தினோம். சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான எங்களது போராட்டம் பல்வேறு வகையில் நடைபெற்றது.
அக்காலகட்டத்தில் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட் நபர்களில் 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதனை எதிர்த்து நடைபெற்ற வழக்கில், 23 பேரையும் தண்டிக்கின்ற அளவிற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என்று நீதிமன்றம் தீர்ப்பெழுதியது. அதிமுகவைப் பொறுத்தவரை குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் முனைந்து நின்றது. திமுக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வில்லை.