மதுரை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், தமிழ் திரைப்படத் துறையின் உச்ச நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் காலமானார். தனது இளமை காலங்களில் மதுரையில் வாழ்ந்த அவரது பூர்வீக இல்லம் மதுரை மேலமாசி வீதியில் தான் அமைந்துள்ளது.
மதுரைக்கும் விஜயகாந்த்துக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. தனிப்பட்ட கடுமையான உழைப்பின் காரணமாக திரைத்துறையில் உச்ச நிலையை அடைந்தவர். இதன் அடிப்படையில் மதுரையில் அவருக்கு வெண்கலச் சிலை வைக்க வேண்டுமென விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட தேமுதிக மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிகண்டன், வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் கூறுகையில் "தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுரையில் பிறந்து வளர்ந்தவர், விஜயகாந்திற்கு கல்வி, திருமணம் உள்ளிட்டவை மதுரையில் தான் நிகழ்ந்தது. மேலும், தேமுதிக கட்சி மதுரையில் தொடங்கப்பட்டது. இப்படி மதுரைக்கும் விஜயகாந்த்துக்கும் நிறையத் தொடர்பு உள்ளதால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் முழு உருவச் சிலை அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என கூறினார்.
இதையும் படிங்க:அமலாக்கத்துறையை வைத்து நில அபகரிப்பில் ஈடுபடும் பாஜக நிர்வாகி; மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் புகார்!