மதுரை:ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்தவர், அருள் ஆரோக்கியமேரி. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஓலைக்குடா பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் பிரதானத் தொழிலாக மீன்பிடித்தல் இருந்து வருகிறது. கடற்கரையில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவுவரை மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குமேல் இலங்கை கடல் எல்லை தொடங்குகிறது. அதோடு ஓலைக்குடா கடற்கரைப் பகுதியில் அரியவகை உயிரினங்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
தற்போது ஓலைக்குடா பகுதியில் ராமேஸ்வரம் நகராட்சி சார்பாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுத்திகரிப்பு செய்த நீரை பைப்-லைன் மூலம் கடலில் கலப்பதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையம் கடற்கரையிலிருந்து 90 மீட்டர் தொலைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதனால், இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டால் அப்பகுதி மிக அதிக அளவில் பாதிக்கப்படும். மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பிற்காக ஆள்துளைக் கிணறு அமைக்கப்பட உள்ளது. தீவுகளின் அருகே ஆழ்துளைக்கிணறு அமைப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதனால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இடைகாலத் தடை விதிக்க வேண்டும். மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கிற்கு ஏற்கெனவே பணிகள் மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ள பகுதி குறித்த வரைபடம் அமைந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 27) நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஹேமலதா ஆகியோரது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் பொதுநலன் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:'அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய கடிதத்திற்கு அரசு பதிலளிக்கவில்லை'