திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ், தமிழ் தொல்குடிகள் வாழ்ந்ததை ஆதாரங்களுடன் உறுதிசெய்ய உதவும் வகையில், கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்கள், சிவகளை, கொந்தகை கிராமங்களில் அகழாய்வு நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதேபோல் மதுரையிலுள்ள சமணர் படுகை உள்ளிட்ட அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தொல்லியல் துறை தரப்பில், "ஆதிச்சநல்லூர், புலிகட்டு, மலையடிப்பட்டி, கீழடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் அறிக்கைகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் அறிக்கைகள் வெளியிடப்படும்.
கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களில் 10 பொருட்கள் கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக பரிசோதனை காலதாமதம் ஆகிறது.
கொடுமணல் அகழாய்வில் 96 பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் நெடில் எழுத்துகள் கிடைக்கப் பெறாத நிலையில், கொடுமணல் அகழாய்வில் நெடில் ஆ,ஈ எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.