கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் சில பகுதிகளில் முழு ஊரடங்கும் போடப்பட்டது. மேலும், ஊரடங்கு உத்தரவையடுத்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகள், நிறுவனங்கள் தவிர மற்றவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டதால், பலர் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.
தங்களது கையிருப்புகளைக் கொண்டு ஊரடங்கு காலத்தைச் சமாளித்துவிடலாம் என எண்ணியிருந்த பலரும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மனமுடைந்து மற்ற நாள்களைச் சமாளிப்பது குறித்த சிந்தனை வேதனையுடன் எழுந்திருக்கும்.
அதேபோன்ற மனநிலையில்தான் உள்ளார் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள குறவன்குளம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜன். இவர் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவி நேசமணி, மூன்றாம் வகுப்பு படித்துவரும் மகள் திவ்யதர்ஷினியுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளி திட்டத்தின்கீழ் ஆயிரம் ரூபாய் நிவாரணமும் பெற்றுவருகிறார். இவர் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழும், இவரது மனைவி நேசமணி மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்துவந்துள்ளனர்.