தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் காவலப்பட்டி ஊராட்சி நிதி முறைகேடு; ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

திண்டுக்கல் காவலப்பட்டி ஊராட்சி நிதி முறைகேடு புகார் குறித்து ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 3 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 10, 2023, 7:58 PM IST

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த பெரியதுரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், "திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவலப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக கமலவேணி என்பவரும், ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக சிவகாமி என்பவரும் செயல்பட்டு வருகின்றனர்.

காவலப்பட்டி ஊராட்சியில் பல்வேறு பணிகளை செய்யாமலே செய்ததாக கணக்கு காட்டி பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஊராட்சி மன்றத் தலைவர் கமலவேணி மற்றும் துணைத்தலைவர் சிவகாமியும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பழனி ஊராட்சி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சியில் கடந்த ஏப்ரல் 2020 முதல் அக்டோபர் 2022 நிதியாண்டு வரையில் காவலப்பட்டி ஊராட்சி நிதியிலிருந்து குடிநீர் பைப்லைன் உடைந்ததை சரிசெய்ததாக, அதாவது வேலை செய்யாமலேயே பைப்லைன் மாற்றியதாக கணக்கு காண்பித்து 13,08,170 ரூபாய் தொகையை வேறு நபர்களின் பெயரின் மூலம் கையாடல் செய்துள்ளார்.

அதேபோல், சுகாதாரப் பொருட்கள் மற்றும் குடிநீர் பைப் சாமான்கள் ஆகிவற்றை வாங்காமலேயே வாங்கியதாக கணக்கு காண்பித்து போலி பில்கள் மூலமாக (அதாவது கடைகளுக்கு 10% கமிஷன் தொகை கொடுத்து பில் பெற்றுக்கொண்டு) அந்த பில்களின் அடிப்படையில் சுகாதாரப் பொருட்கள் வாங்கியதாக 4,58,458 ரூபாய் மற்றும் குடிநீர் பைப் சாமான்கள் வாங்கியதாக 8,17162 ரூபாயும், சாக்கடை சுத்தம் செய்ததாக 3,50,436 ரூபாயும் மோட்டார் பழுது பார்த்தது தொடர்பாக 1,87,120 ரூபாயும் ஆக மொத்தம் 31,21,346 ரூபாய் தொகையை ஊராட்சி நிதியிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவர் கமலவேணி மற்றும் துணைத் தலைவர் சிவகாமி ஆகியோர் கையாடல் செய்துள்ளனர்.

ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததற்கு தகுந்த ஆதாரங்களோடு 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநரிடம் மனு அளித்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை பண முறைகேடு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, பொதுமக்களின் வரிப்பணத்தையும், ஊராட்சி நிதியையும் கையாடல் செய்து தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் இருவரையும் தகுதிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஊராட்சி மன்றத் தலைவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்த ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், முறைகேடில் ஈடுபட்டவர்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மூன்று வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அதேபோல், முறைகேடு புகாருக்கு உள்ளான ஊராட்சி மன்றத் தலைவர் துணைத் தலைவர் பதிலளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு பின்னடைவு... எதிர்க்கட்சிகள் பக்கம் சென்ற கூட்டணி கட்சி!

ABOUT THE AUTHOR

...view details