கரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு சமூகத்தின் பல்வேறு தரப்பினரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதில் மிக முக்கியமானவர்கள் மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்காக தமிழ்நாடு அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு ஓங்கி ஒலிக்கிறது.
ஒரு ரூபாய் உதவி என்றாலும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது
இதுகுறித்து தவழும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சொர்க்கம் ராஜா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், 'ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எங்களின் வாழ்க்கை மிகவும் துன்பமயமாக மாறியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 28 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். எங்களைப் பொறுத்தவரை அரசு வழங்குகின்ற ஒரு ரூபாய் உதவி என்றாலும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அரசு கொடுக்கும் உணவு கிடைத்தாலே போதும்
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக அறிவித்த கட்டணமில்லா தொலைபேசி எண் (toll-free) முதல் இரண்டு நாட்கள் மட்டுமே செயல்பட்டது. தற்போது அந்த நம்பர் இயங்கவே இல்லை. கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு எங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் வந்து வைரஸ் தொற்று ஏற்பட்டால்கூட சிகிச்சை காலத்தின்போது அரசாங்கம் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வாழ்ந்துவிடுவோம். அந்த அளவிற்கு நாங்கள் கடும் துன்பத்தோடு வாழ தள்ளப்பட்டுள்ளோம்.