மதுரை : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் 2 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையர், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு திட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்வுகாணும் வகையில் "முதல்வரின் முகவரி" என்ற தனித்துறை தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 372 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு 900 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 466 கோடியே 56 லட்ச ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து உள்ளார்.
குறிப்பாக அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏதுவாக பிரம்மாண்ட அரங்கம் அமைத்தல், டைடல் பூங்கா அமைத்தல், 400 படுக்கை வசதிகள் கொண்ட குழந்தைகள் நல மையம் அமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "மதுரை மாவட்டத்தில் அரசு திட்ட பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மாவட்டம் தோறும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார்.
நான் எந்த ஆய்வுக்கு சென்றாலும் மாவட்ட ஆட்சியர், அங்குள்ள அமைச்சர்கள், சிறப்பு திட்ட செயலாளர், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடன் சிறப்பு திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறேன். மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் திட்டத்தின் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்போது கொடுக்கப் போகிறோம்? என்பது குறித்து ஆலோசிக்கபட்டது.
அதில் சில திட்டங்கள் சிறப்பாக உள்ளன. சில திட்டங்களில் தொய்வு உள்ளது. இந்த ஆய்வு கூட்ட பணிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரிவான அறிக்கை கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:Australia Tour of India : ஆஸி.யை சமாளிக்குமா ராகுல் படை? இன்றைய ஆட்டத்தின் சிறப்புகள் என்ன? ஒரு அலசல்!