மதுரை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநிலத்தில் நேற்றைய முன்தினம் (செப். 13) பொறியியல் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பெண்கள் டெங்கு காய்ச்சல் பதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், மேலும் 50 பேர் வரை புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, புதுச்சேரி மாநிலத்திற்கு அருகாமையில் உள்ள கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. அதன் வெளிப்பாடாக நேற்றைய தினம் (செப். 14) 4 பெண்கள் 2 ஆண்கள் என 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில், மழை என மாறி வருகின்ற சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பெரும்பாலானோர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.