வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் அளித்த பேட்டி மதுரை:ஆழ்வார்புரம் அருகே உள்ள வைகை ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் எழுந்தருள்வது வழக்கம். இதனால் கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து, மூங்கில் கடை தெரு வழியாக ஆழ்வார்புரம் வரை செல்லும் பாதையில் பொதுமக்களும், நூற்றாண்டு பாரம்பரிய பெருமைமிக்க ஏவி மேம்பாலத்தில் விஐபிக்களுக்கும் அனுமதி அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக பலர் காயம் அடைந்ததும், இருவர் உயிரிழந்ததும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இந்த நிலையில், அது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் பாதுகாக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் துறை இணைந்து மேற்கொண்டன.
இதனையடுத்து கோரிப்பாளையத்தில் இருந்து ஏவி மேம்பாலம் ஏறும் இடத்தில் உள்ள கைப்பிடிச்சுவர் விஐபிக்களுக்காக இடிக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், "சித்திரைத் திருவிழாவிற்காக வருகை தரும் மக்களுக்கான குடி தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத காரணத்தால், கடந்த முறை தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிரிழப்புகள் நேர்ந்தன. இதை மனதில் கொள்ளாமல், விஐபிக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் மதுரை மாநகராட்சி அக்கறை செலுத்துகிறது. இதற்காக நூற்றாண்டு பாரம்பரியமிக்க ஏவி பாலத்தின் கைப்பிடிச் சுவரை உடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது வைகை நதி மக்கள் இயக்கம் வழக்குத் தொடுக்கும்" என்றார்.
மேலும், இது தொடர்பாக மதுரை மாநகராட்சியின் உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏவி பாலத்தின் தொடக்கத்தில் உள்ள இந்த கைப்பிடிச்சுவர், பழமை வாய்ந்தது அல்ல. அதில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அண்மையில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். திருவிழா நடைபெற்ற உடன் உடனடியாக சுவர் சீரமைக்கப்பட்டு விடும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:kallalagar: பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்.. மதுரையை அதிர வைத்த 'கோவிந்தா' முழக்கம்!