மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும்விதமாக ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
டி. கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து ஆறு சப்பரங்கள் செய்து வந்து, அம்மாபட்டியிலிருந்து முத்தாலம்மனை அவரவர் ஊருக்கு அழைத்துச் சென்று வழிபடுவர். ஜாதி, மத பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவதுதான் இந்த விழாவின் சிறப்பு.
முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் உள்ள ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் உள்ள சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் உள்ள மகாலட்சுமி, வி.அம்மாபட்டியில் உள்ள பைரவி, காடனேரியில் உள்ள திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் உள்ள சபரி, கி.சத்திரப்பட்டியில் உள்ள சவுபாக்கியவதி என ஏழு பெண் தெய்வங்களை கொண்டு இந்த ஏழு ஊர் முத்தாலம்மன் சப்பரத் திருவிழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு கரோனா தொற்று காரணம் திருவிழா நடைபெறுமா என அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பம் நிலவிவந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் வினை ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, திருவிழாவை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.