சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி கள அருங்காட்சியகம், தற்போது பிரபல சுற்றுலாத் தளமாக உருவெடுத்து வருகிறது. நாள்தோறும் அதிகளவிலான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்து, ஒவ்வொரு அரங்குகளையும் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
அதேநேரம், தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து மதுரை மாவட்ட காது கேளாதோர் சங்கத்தில் இருந்து மாற்றுத்திறனாளி பெண்களான ரம்யா, தாரணி, யோகேஸ்வரி, ஜெஸிமா, ராஜலட்சுமி, வித்யா, பெருமி, அபி, முத்துகாளீஸ்வரி மற்றும் பிரியங்கா ஆகிய பத்து பேர் கொண்ட குழு, நேற்று (மே 13) கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தனர்.
அப்போது, அந்தக் குழுவைச் சேர்ந்த வித்யா, அங்குள்ள படங்கள் மற்றும் தொல்லியல் பொருட்கள் குறித்து சைகை மொழியிலேயே வந்திருந்த பிற பெண்களுக்கு விளக்கினார். இந்த விளக்கத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், மற்ற பெண்கள் சைகை மூலமாகவே கேள்வி எழுப்பினர். அதற்கு, வித்யா அதே சைகை மொழியில் அழகாக விளக்கினார்.