மதுரை: மதுரை மாவட்டத்தில் தை முதல் நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று(டிச.23) நடைபெற்றது. இதில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 3 இடங்களிலும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெறவிருப்பதையடுத்து இன்று(டிச.23) மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் துறை ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் போது விழா கமிட்டியின் சார்பாக கே.கே கண்ணன் என்பவர் பேசியதாவது, "ஒவ்வொரு முறையும் தென்கால் பாசன விவசாயிகளின் சார்பாகவே ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெறும். ஆனால் ஒரு சிலர் இடையூறு விளைவித்ததனால், கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி வருகிறது. கிராம முறைப்படி எங்கள் சங்கமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்" என்று ஆட்சியர் முன்பு கோரிக்கை வைத்தனர்.